Sunday, May 2, 2010

நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் - தாயக மக்களின் பெயரில் புலம்பெயர் அரசியல் சவாரி : த ஜெயபாலன்

மே 18க்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகப் புயல் மையங்கொண்டது போன்று மாறி மாறித் தேர்தல்கள் வந்து போகின்றது. வட்டுக்கோட்டைத் தேர்தல், ஜனனி ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல், நாடுகடந்த தமிழீழத்தின் நாட்டுக் குழுக்களுக்குத் தேர்தல், யாழ்ப்பாண மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்குமான தேர்தல், இலங்கை ஜனாதிபதித் தேர்தல், இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல், நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானியத் தமிழர்களுக்கு இவற்றுடன் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என்று கடந்த ஓராண்டுக்குள் தமிழ் மக்கள் மீதான ஜனநாயகச் சுமை பெரும் சுமையாகிவிட்டது. இதுவரை ஏக தலைவரும் அவரது இயக்கமும் மட்டும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முடிவெடுத்த நிலைபோய் தற்போது தமிழ் மக்களை வாக்களித்து ஆணை வழங்கும்படி கேட்கின்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. போகின்ற போக்கில் வட்டுக் கோட்டைக்கும் நாடு கடந்த தமிழீழத்திற்கும் மட்டுமல்ல ஏக தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? ஏக தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்று தேர்தல் வைத்து முடிவெடுக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகம் ஏதோ ஒரு வகையில் வீச்சுப் பெற்றுள்ளது.

மே 02, 2010ல் நாடு கடந்த தமிழ் பாராளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து செறிந்து வாழும் இடங்களில் நடைபெறவுள்ளது. 135 பேர் கொண்டு அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் 115 பேர் புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் செறிவாக வாழுகின்ற நாடுகளில் இருந்து தேர்தல் மூலமாகத் தெரிவு செய்யப்படுவார்கள். ஏனைய 20 பேரும் தமிழ் மக்கள் செறிவு குறைந்த அல்லது தேர்தலை நடாத்துவதற்கு வாய்ப்புக் குறைந்த பகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்வார்கள். இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 115 பேரால் தெரிவு செய்யப்படுவார்கள். 20 பேரில் ஈழத்தமிழ் மக்கள் வாழாத நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் பங்குபெற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி அதன் மதியுரைக் குழு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கின்றது: ”தமிழ் மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்றெடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைக்கூடாக முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை இலங்கைத் தீவிலிருந்து வெளியேறி வாழுகின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அத்தோடு தமிழர்கள் தமது இறைமையை நிலை நிறுத்தும் போராட்டத்தினை முன்னெடுக்கும் பணியில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் குறிப்பாக இரண்டாம் தலைமுறையினரும் பெரும் பங்கு வகிக்க வேண்டும் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் தாராளவாத மக்களாட்சியின் இடையே வாழ்கின்றனர். தாம் வாழும் நாடுகளின் விதிமுறைகளுக்கேற்ற வகையில் தமிழீழ இலட்சியத்தை ஜனநாயக அமைதி வழிகளால் முன்னெடுக்கலாம் என்பதில் பற்றுறுதி கொண்டிருக்கிறார்கள். அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப் பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.”

இதில் உள்ள ஆபத்தான அம்சம் இதுவரை சரிவர உணரப்படவில்லை. ஈழத் தமிழ் மக்களின் பெயரால் நடாத்தப்படுகின்ற இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் தமது தாயகத்தை விட்டகலாத தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லை. இலங்கை அரசு அப்பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்கின்ற நியாயமான அச்சம் காரணமாக இருந்தாலும் தாயக மக்களின் பெயரில் நடாத்தப்படுகின்ற இந்தப் பாராளுமன்றத்தில் அம்மக்கள் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டு இராதது இதன் மிகப்பெரும் பலவீனம்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் பிரதிநித்துவப்படுத்தவில்லை என்பது கடந்த ஓராண்டு காலத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. வன்னி யுத்தத்தில் இடம்பெற்ற மிகமோசமான அழிவுக்கு இலங்கை அரசு எவ்வளவு பொறுப்புடையதோ அதேயளவு பொறுப்பு இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்குப் பின்னணியில் உள்ளவர்களுக்கும் உண்டு. இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிடுபவர்கள் பெரும்பாலும் தங்களுடைய தகமையாக புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்களில் பங்குபற்றியதை குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் இவர்களில் யாருமே அம்மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வன்னி மக்கள் யுத்தத்தில் இருந்து தப்ப முடியாது தடுத்து வைக்கப்பட்டதையோ, தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறார்கள் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டதையோ, யுத்த்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையோ சுட்டிக்காட்டவில்லை. பணயம் வைக்கப்பட்ட தமிழ் மக்களை விடுவிக்கும் படி விடுதலைப் புலிகளைக் கோரவில்லை. சர்வதேச சமூகம் அம்மக்களை விடுவிக்க எடுத்த முயற்சிக்கு எதிராகவும் இவர்கள் குரல் எழுப்பி இருந்தனர். இந்நடவடிக்கைகள் அனைத்தும் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்திருந்தது. வன்னி மக்கள் மிகக் கடுமையான யுத்தத்தை எதிர் கொண்டு வரலாறு காணாத அழிவைச் சந்தித்த போதும் இன்று தேர்தலை நடாத்துகின்ற நாடு கடந்த தமிழீழத்திற்கான செயற்குழுவும் தேர்தலில் போட்டி போடுகின்ற வேட்பாளர்களும் பொறுப்பற்ற முறையிலேயே அன்று நடந்து கொண்டனர். இவர்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்ய எவ்வித தகுதியையும் கொண்டிருக்கவில்லை.

இவர்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் வெளிப்படுத்தவில்லை என்பதனை இவர்களின் பிரதிநிதிகளை முற்றாக நிராகரித்ததன் மூலம் தாயக மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலட்சிய வாக்கியமான தாயகம் தேசியம் இறைமை இவற்றை முன்வைத்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிட்டது. இதற்கு புலம்பெயர்ந்த மண்ணில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களும் பெரும்பாலும் ஆதரவு வழங்கி இருந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முன்னணியில் நின்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர். இப்போராட்டங்களில் முன்னின்ற மற்றுமொருவரான எம் கெ சிவாஜிலிங்கமும் தோற்கடிக்கப்பட்டார். இவை புலம்பெயர்ந்த அரசியல் தலைமைகள் தாயக மண்ணில் இருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு உள்ளன என்பதைப் புலப்படுத்துகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழு நாடு கடந்த அரசு பற்றி இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகிறது: ”ஈழத் தமிழரின் புலப்பெயர்வும் அவர்களுக்கு நாடு கடந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறது. மரபார்ந்த நாடு-தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து ‘நாடு கடந்த தேசியம்’ என்ற புதிய நிலையை அவர்கள் எட்டியுள்ளனர். நாடு கடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக, பொருளியல், அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைக்கும் வழிமுறையாகும்.”

இப்பகுதியில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களை அவர்களின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைப்பதற்கு இதுவும் ஒரு வழிமுறையாக அமையலாம். ஆனால் அதனைத் தாண்டி தாயகத்தில் வாழ்கின்ற மக்களின் அரசியல் பொருளாதார வாழ்நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலுக்குள் வாழ்ந்து கொண்டு அம்மக்கள் தொடர்பான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறுவது ஏற்கனவே வன்னி மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிறுத்திய கைங்கரியத்தையே இவர்கள் மீளவும் செய்ய உள்ளனர் என்பதனைக் கட்டியம் கூறுகின்றது. ஒப்பீட்டளவில் ஜனநாயகப் பண்புள்ள மேற்குலகில் வாழ்ந்து கொண்டும் தங்கள் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய எவ்வித மீளாய்வும் இல்லாமல் தங்கள் பலம் பலவீனம் பற்றிய எவ்வித மதிப்பீடும் இல்லாமல் மீண்டும் தாயக மக்களுக்காக இவர்கள் சிந்திக்க முற்படுவது அம்மக்களுக்கு இவர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற அச்சத்தையே தோற்றுவிக்கின்றது.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களில் முற்றாக அல்லது பெரும்பாலானவர்கள் அரசியல் அலையில் அடிபட்டுச் செல்பவர்களாகவே உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் தங்களையும் இணைத்துக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தியதற்கு அப்பால் இவர்களிடம் எவ்வித அரசியல் அனுபவமும் இருந்ததில்லை. இதனை அவர்கள் பற்றிய குறிப்புக்களே புலப்படுத்தி நிற்கின்றது. மேலும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் போட்டியிடுபவர்கள் செயற்பாட்டாளர்களும் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு தங்கள் நோக்கங்களுக்காக பினாமிகளாகப் பயன்படுத்தினார்களோ இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்குப் பின்னால் உள்ளவர்களும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். இந்தத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படும் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு எவ்வித அரசியல் பொருளாதாரப் பலமும் கிடையாது. உண்மையான பொருளாதார பலம் இதன் பின்னணியில் உள்ளவர்களிடமே உள்ளது. அவர்களே இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை இயக்கப் போகின்றார்கள். அவர்களே இத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இதில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பெரும்பாலும் அரசியல் முகவரியற்றவர்கள். அல்லது அரசியலில் பாலபாடத்தைத் தாண்டாதவர்கள்.

”நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் வன்முறை தவிர்ந்தவையாகவும் எந்த நாட்டு சட்டங்களையும் மீறாத வகையிலும் மேற்கொள்ளப்படும்.” என்று நாடு கடந்த அரசின் மதியுரைக் குழு தெரிவிக்கின்றது. இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் தற்போது தொடர்புபட்டவர்கள் ஒவ்வொருவருமே மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழத்திற்கான அதன் நடவடிக்கைகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள். தற்போது அது பற்றிய எவ்வித மீள்பரிசீலனையும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய எவ்வித மதிப்பீடும் இன்றி வன்முறையைக் கைவிட்டுவிட்டதாக அறிவிக்கின்றனர். மே 18ல் இரவோடு இரவாக இவர்கள் பெற்ற ஞானம் மிக ஆபத்தான ஞானம். இன்னொரு மே 18ல் இரவோடு இரவாக ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்று இவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இவர்கள் வெறும் பினாமிகளே. இவர்களை இயக்குபவர்கள் தான் எப்போதும் முடிவுகளை எடுப்பார்கள்.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கு 20 பேரைத் தெரிவு செய்வதற்கு 38 பேர் வரை போட்டியிடுகின்றனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொருளாதார பலத்தை தம் வசம் வைத்துள்ள ரூட் ரவி, தனம் மற்றும் முக்கிய புள்ளிகள் போட்டியிடவில்லை. இவர்களால் இயக்கப்படுகின்ற அடிப்பொடிகளே தேர்தலில் நிற்கின்றனர். இவர்களில் யார் வென்றாலும் முடிவுகள் எடுக்கப் போகின்றவர்கள் இவர்களை இயக்குகின்ற எஜமானர்களே. நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றம் இன்னுமொரு பிரிஎப், ரிவைஓ போன்றே இயங்கும்.

தங்களுக்கு சமூக அந்தஸ்த்தை வேண்டுபவர்கள் போட்டியிட்டு தங்கள் இமேஜை கட்டமைப்பதற்கு அப்பால் தாயக மக்களுக்கு இவர்களால் ஏதுவும் சாதிக்க முடியும் என்பது சந்தேகமே. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன், மாவை, சுரேஸ் கூட்டு குறைந்த பட்சம் மே 18ற்குப் பின்னாவது தங்கள் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத் தேர்தலில் நிற்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு சுயமான அரசியல் சிந்தனையே கிடையாது.

சுரேஸ் பிரேமச்சந்திரனுடைய சகோதரர் ஆறுமுகம் கந்தையா மனோகரன் யுகே யில் வட்டுக்கோட்டைக்கு வாக்கெடுப்பு நடத்தி இப்போது நாடுகடந்த தமிழீழம் அமைக்கவும் போட்டியிடுகின்றார். இவர் படித்துப் பெற்ற சமூக விஞ்ஞானம் - (அரசியல்) கலாநிதிப் பட்டமோ அல்லது ‘தூள்’ விநாயகர் என்று அறியப்பட்ட இல்போர்ட்டில் ‘செல்வ விநாயகர்’ என்ற ஆலயத்தை நிறுவிய செல்வராஜா செல்லத்துரை ஆன்மீகப் பலத்தோடு மேற்கொண்டுள்ள அறவழிப் பயணமோ தாயக மக்களுக்கு உதவியாக அமையாவிட்டாலும் உபத்திரவமாக அமையாது இருக்க முயற்சிக்க வேண்டும். இவர்கள் நாடு கடந்த தமிழீழம் எடுக்கிறார்களோ அல்லது தாங்கள் வாழும் நாடுகளில் தமிழீழம் எடுக்கிறார்களோ அவர்களது ஜனநாயக உரிமை. ஆனால் தங்கள் அபிலாசைகளுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் (நாடு கடந்த தமிழீழம்) பதவிகளுக்காகவும் தாயக மக்கள் மீது சவாரி செய்யாமல் இருக்க வேண்டும்.

குறிப்பாக பிரித்தானியாவைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கான தேர்தலும் இத்தேர்தல் ஆணைக்குழுவும் சிறு பிள்ளைத் தனமானதாகவே உள்ளது. ஒவ்வொரு தேர்தல் வாக்காளர் அட்டையிலும் அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து வாக்களிப்பு நடைபெறுகின்ற தேர்தல்களிலேயே முறைகேடுகள் பற்றிய செய்திகள் வருகின்றன. இங்கு வாக்காளர் அட்டை இல்லை. தன்னை உறுதிப்படுத்த முடியாத வாக்காளரும் வாக்களிக்க வழியுண்டு. சில மாதங்களுக்கு முன்னர் இரு நாள் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தலில் ஈஸ்ற்ஹாம் பேர்ச்சஸ் வீதியில் உள்ள ஒருவர் ஒரே நாளில் தான் வெவ்வேறு வாக்களிப்பு நியைங்களில் 15 வாக்குகளை அளித்ததாகத் தெரிவித்தார். இதற்கு மேல் இத்தேர்தல் பற்றியோ அதனைக் கண்காணிக்கும் ஆணைக்குழு பற்றியோ குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் ஆணைக் குழுத் தலைவர் நடராஜா விஜயசிங்கம் தமிழ் தொலைக்காட்சியில் அரசியல் விமர்சனம் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் துதிபாடி வன்னி மக்கள் முள்ளிவாய்க்காலில் பேரழிவுக்கு உள்ளாவதை வேடிக்கை பார்த்தவர். ஓய்வு பெற்றுள்ள இவருக்கு இதுதான் தற்போது பொழுது போக்கு.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களின் முக்கிய தகுதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட போராட்டங்களில் பங்கு பற்றியது, கோசம் எழுப்பியது, புலிக் கொடி பிடித்தது. இதற்கு அப்பால் இவர்கள் தங்கள் சமூகம் சார்ந்த நடவடிக்கையாக எதனையும் குறிப்பிடவில்லை. பலருக்கு அவ்வாறு குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பதும் உண்மை. போட்டியிடும் வேட்பாளர்கள் கல்வித் தகமை உடையவர்களாகவும் வியாபார உரிமையாளர்களாகவும் ஆலய உரிமையாளர்களாகவும் உள்ளனர். ஆனால் இவர்கள் இதுவரை தமிழ் சமூகத்திற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் எவ்வாறான காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளனர் எனக் குறிப்பிடவில்லை. ஆனால் ‘தூள் விநாயகர்’ உரிமையாளர் செல்வராஜா உட்பட சிலரது குறிப்புகளோ 1977 அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு உள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்பதில் நம்பிக்கை கொள்வோம். அவை நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்.

இக்கட்டுரையை 18 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற நினைவுக் குறிப்புடன் முடிக்கலாம் என நினைக்கிறேன். தற்போதைய ரிஆர்-ரெக் கல்வி நிலையம் தங்களது ஆறு மாத கணணிப் பயிற்சியில் டிப்ளோமா பெற்ற மாணவர்களுக்கு மிடில்செக்ஸ் பல்கலைக் களகத்தில் பட்டமளிப்புச் செய்யும் முறையை அப்போது அறிமுகப்படுத்தி இருந்தது. பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டமளிப்பின் போது அணியும் அங்கிகளை அணிந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் வீட்டில் பிறேம் போட்டு அலங்காரத்துக்கே வைக்க முடியும். இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றமும் கிட்டத்தட்ட அது போன்ற ஒரு விடயமே.



நன்றி: தேசம் நெற்

No comments:

Post a Comment