Friday, December 11, 2009

நல்லபாம்பா? நாகப்பாம்பா? தமிழர்களுக்கு எது வேண்டும்? – டி.அருள் எழிலன்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா
? இல்லையா? என்ற சர்ச்சைகளுக்கிடையே வந்து சென்றிருக்கிறது மாவீரர் தினமான நவம்பர் 27. வழக்கம் போல தமிழ் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழர்களின் பாரமரீய உடைகளை அணிந்து பழைய பாடல்களை கேட்டு மாவீரர் தினத்தைக் கொண்டாடிக் கலைந்திருக்கிறார்கள். ஆனால் புலம்பெயர் நாடுகளை விட இவவருட மாவீரர் தின நிகழ்வுகள் தமிழகத்தில் அதிகம். பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு அவர் இருக்கிறார். என்பதற்கு இதுவரை எவ்வித ஆதாரங்களும் முன் வைக்கப்படவில்லை. தேவன் வருவார் என்பது போல பிரபாகரன் வருவார் ஐந்தாவது ஈழப்போர் வெடிக்கும் என்று ஸ்லோகங்களைச் சொல்கிறார்கள். எனது தோழில் ஒருத்தி கேட்டாள். “ஆமாம் கடந்த ஆறு மாத காலமாக வராத தேசீய தலைவர் இனி வந்து என்னதான் செய்யப் போகிறார்? “என்று கேட்டார். உண்மையில் அவருக்கு இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளிகளை கூண்டிலேற்றும் கோபமும் ஈழப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் உத்வேகமும் இருந்தது. உலகெங்கிலும் தமிழ் மக்களுக்கு பேரினவாத பௌத்த சிங்கள பாசிஸ்டுகள் மீதும், விஸ்தரிப்புக் கனவோடு ஈழ மக்களை சூறையாடிய இந்தியா மீதும் கடுமையான கோபம் இருக்கிறது.

இந்தக் கோபமும், வன்னி மக்களை இனப்படுகொலை செய்த கொடூர இன அழிப்புமே அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கான அஸ்திவாரம். மே-29 தியதி பிரபாகரனையும் அவரது போராளிகளையும் பாசிஸ்டுகள் கொன்று விட்டார்கள் என்ற செய்தி பரவிய போது எல்லோருக்குள்ளும் ஒரு நெருப்பு எரிந்தது. ஆனால் அந்த நெருப்பை அணைத்தது புலி ஆதரவாளர்களே.அவர் இருக்கிறார் என்றால் அது வெளிப்படுத்தப்பட வேண்டும் . இல்லை என்றால் முப்பதாண்டுகாலம் சமரசமற்ற ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த பிரபாகரனையும் புலிகளையும் வன்னி மக்களையும் எதிரிகள் கொன்று விட்டார்கள். என்று அதை தமிழ் மக்கள் முன்னால் வைத்து நீதி கேட்டிருக்க முடியும். ஆனால் இப்போது அவருக்கும் அஞ்சலியும் செலுத்தாமல் அவரையும் அவமதித்து போராட்டத்தையும் நகர்த்திச் செல்லும் திராணியற்று. நண்பன் யார்? எதிரி யார்? துரோகி யார் ? என்று மூன்று பிரிவாக புலி ஆதரவாளர்கள் அடித்துக் கொள்கிறார்கள். மே மாதம் முடிவில் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படிச் சுட்டுக்காட்டியிருந்தேன் அதற்கு எனது நண்பர்களே என்னை கோவித்துக் கொண்டார்கள். அது பிரபாகரனின் மரணச் செய்தியையும் அவரது சகாக்களின் மரணச் செய்தியையும் வெளியிட்ட இலங்கை அரசு அச்செய்தியை மிக மிக குழப்பமாக வெளியிட்டது. காட்டப்பட்ட உடல் பிரபாகரனுடையதா? இல்லையா? என்று குழம்ப வேண்டும். என்பதுதான் இலங்கை இந்திய அரசுகளின் திட்டம். வன்னி மக்கள் மீது ஆயுதப்போர் முடிந்த பிறகு. அடுத்தப் போரான உளவியல் போரை உலகத் தமிழ மக்களிடம் மிகத் திறமையாக நடத்திக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு என்று எழுதியிருந்தேன். உளவியல் போர் என்று அப்போது நான் சுட்டிக்காட்டிய விஷயத்தை இப்போது புலிகளின் புலனாய்வுத்தலைவர் என்னும் பெயரில் அறிக்கை விட்டிருக்கும் அறிவழகன் என்பவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். உலகெங்கிலும் ஈழத்தின் இனப்படுகொலை ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியிலிருந்து தமிழ் மக்களை திசை திருப்பி அவர்களை இந்த விவாத்திலும் குழப்பித்திலுமே நிறுத்தி வைக்க வேண்டும்.

இதற்கப்பால் அவர்களை நகர்த்திச் செல்லக் கூடாது என்பதே பேரினவாதிகளின் திட்டம். ஏனென்றால் இலங்கையைப் பொறுத்த வரையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டது. மீதியிருப்பது தமிழக மக்களும், புலத்து மக்களும்தான் இந்த இரு சாராரையுமே கையாளும் விதமாகத்தான் அவர்கள் குழப்பமான செய்தியை வெளியிட்டார்கள். அந்நேரத்தில் கே.பியிடம் ஒரு நேர்காணலில் போது இப்படிக் கேட்டிருந்தேன். பிரபாகரனின் உடலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பெற நீங்கள் முயர்சித்திருக்கலாமே என்று? அவர் சொன்னார். “அவரது இரத்த உறவுகளே அவர் உடலுக்கு உரிமை கோரவில்லை நான் என்ன செய்ய முடியும்” என்றார். அவர்கள் கடைசியில் பிரபாகரன் உடலை நந்திக்கடலில் வீசிவிட்டதாகச் சொன்னார்கள். அவரது மரண்ச் சான்றிதழ் குறித்து இந்தியாவும் , இலங்கையும் மௌனம் சாதிக்கிறது. இரண்டு நாடுகளுக்குமே இதில் நெருக்கடி இருக்கிறது. பிரபாகரனின் மரணச் சான்றிதழை இந்தியா அரசு பூர்வமாகப் பெறும் என்றால் அதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்,. காரணம் பிரபாகரன் இன்று வரை இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி. தமிழக மக்களின் வெறுப்பை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள விரும்பாத மத்திய அரசு பிரபாகரன் தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களை வைத்தே சில தந்திரமான பிரச்சாரங்களைச் செய்கிறது எப்படி?

மத்திய மாநில அரசுகள் ஈழ மக்களுக்கு துரோகம் செய்யவில்லை . மாறாக பிரபாகரன் தப்பிச் செல்ல உதவியது இந்தியாதான். பிரபாகரன் தப்பிச் செல்ல உதவிய இந்தியா மீது ஏன் கோபப்படுகிறீர்கள்? இதே விதமான பிரச்சாரங்களை தமிழக ஊடகங்கள் சில செய்தன? ஒரு பக்கம் ஈழ மக்களுக்குச் செய்த துரோகத்தை மறைக்க புலி ஆதரவாளர்களே உருவாக்கிக் கொடுத்த பிரபாகரன் ஜீவிக்கிறார் என்ற ஸ்லோகத்தை ஒரு உத்தியாகப் பயன்படுத்துகிறது மத்திய மாநில அரசுகள். இப்போது புலி ஆதரவாளர்களே பிரபாகரனை நீர்த்துப் போகச் செய்து கொண்டிருக்கிறார்கள். போராட்டம் என்பது மக்களின் கோப உணர்ச்சிகள் இருந்து கிளர்ந்தெழுவது மக்களுக்கு கோபம் வருவது எப்படி? பட்டுப்புடவையோ, தலை நிறைய மல்லிகைப் பூவை வைத்துக் கொள்வதாலேயே தமிழர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு விடாது. எதிரிகளை பழிவாங்க அது எவ்விதத்திலும் பயன்படவும் போவதில்லை. மக்கள் ஆயுதம் ஏந்துவதும் புரட்சி நடவடிக்கையில் ஈடுபடுவதும் கோபப்படு, அணியமாகு, அரசியல்மயமாகு என்கிற கோட்பாடுகளில்தான். காயங்களை எப்போது நாம் மறக்கிறோமோ, அல்லது மறுக்கிறோமோ அப்போது நாம் கோழைகளாக வாழவே ஆசைப்படுகிறோம் என்று அர்த்தம். எவன் ஒருவன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் ஆண்ட பழம் பெருமை பேசுகிறானோ அவன் வரலாற்றில் இழப்புகள் இன்றி வாழ நினைக்கிறான் என்று பொருள். ஈழத் தமிழர் விவாகரத்தில் நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் அதுதான்.

முப்பதாண்டுகாலம் சமரசமற்று ஆயுதப் போரை முன்னெடுத்து கடைசி வரை களத்தில் நின்று மடிந்த பிரபாகரனுக்கும் போராளிகளுக்கும் நான் அஞ்சலி செலுத்த விரும்புகின்றேன். அந்தத் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். வன்னி மக்களை சூறையாடிய எதிரிகளிடமிருந்து எமது மக்களையும் அவர்களின் பாரம்பரீய நிலங்களையும் மீட்க புதிய போராட்ட வடிவங்களை உருவாக்க விரும்புகிறேன். ஆனால் இதற்கு எதுவும் வழியில்லை. காரணம் பிரபாகரன் வருவார் ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும் என்கிறார்கள். அவர் வரும் வரை நாம் பழைய பாடலகளைப் போட்டு , பரத நாட்டியம் ஆடி, தூய தமிழில் பேசி. ஈழ மண்ணின் பெருமைகளைப் பேசி, தமிழ் மீதான தமது நம்பிக்கையை வலுப்படுத்துவோம். ஆனால் புலிகளால் வன்னி மக்களை காப்பாற்ற முடியாமல் போனது பற்றியோ, போராளி இயக்கம் ஒன்று மக்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாதது பற்றியோ அக்கறைப் படமாட்டோம். அது பற்றி பேசுவது தேசீயத் தலைவருக்கு செய்கிற துரோகம். என்பதுதான் புலி ஆதரவாளர்களில் ஒரு பிரிவினரின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் முப்பதாண்டுகாலம் போராடி மடிந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தாதது குறித்தோ, மிகப் பெரிய இனப்படுகொலைக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடாதது குறித்தோ, கவலைப்படாமல் அடுத்த தேர்தல் வரை காத்திருந்து அதை தேர்தல் ஆதாயத்துக்கு பயன்படுத்த முடியுமா? என்று அவ்வப்போது தவணை முறையில் தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். கடந்த காலங்களில் முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தின் போதும், எழுச்சி பெற்ற ஈழ உணர்வை மக்கள் போராட்டமாக மாற்றாத இவர்களால் எதையுமே செய்ய முடியாது என்பதை இன்று தமிழகத்தில் உள்ள அதிருப்தியுள்ள இளைஞர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஈழ ஆதரவு என்பது ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ மட்டும்தான் பயன்படுமே ஒழிய வேறு எதற்கும் பயன்படாது என்கிற உண்மை இன்று புரிந்திருக்கிறது. ஏனென்றால் ராமதாஸ், திருமா, நெடுமாறன், வைகோ இவர்கள் அனைவருமே மக்களை நம்பியதை விட இருபெரும் தமிழக அரசியல் சக்திகளையே நம்பினார்கள். ஆகவே தங்களின் கூட்டணிக் கொள்கைக்கு பாதகமில்லாமலே பேசினார்கள். சோனியாவோடு ஒரே மேடையில் இவர்களால் ஏறிக் கொள்ளவும் முடியும் போருக்கு எதிராகவும் பேச முடியும். மக்களை மடையர்களாக்கும் இதே வித்தையை தமிழக மக்களிடம் இருந்து இப்போது புலத்து மக்களும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழமே தீர்வு

பௌத்த சிங்கள இனவெறிப் பாசிசமே அரசு பயங்கரவாதமாக இறுகிப் போன ஒரு நாட்டில் தமிழ் மக்கள் இனிமேல் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியாது
…. ஆனால் . அப்படி எந்த நம்பிக்கைகளும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவும் இல்லை. இது வன்னி மக்களுக்கும் ஏனைய ஈழ மக்களுக்கும் தெரியும். மிக அதிகளவான மக்கள் கொத்துக் கொத்தாய் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று கடலில் மடிவதும் ஏனைய அரசுகளிடம் சிக்கி கடைசியில் எதிரிகளிடமே சரணடைவதும் கூட அதிகமாக நடக்கிறது. முகாம்களுக்கும் லட்சக்கணக்கான மக்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டதைப் போன்ற தோற்றத்தை இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் தோற்று விக்கின்றன. பெரும்பாலான வன்னி மக்களின் நிலங்கள் இன்று அவர்களிடம் இல்லை. பெரும்பாலானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டும் இருக்கிறது. என்கிற நிலையில் மிகத் தந்திரமாக கொலைகார பாசிஸ்டுகளில் யார் நல்லவர் என்ற விவாதத்தைக் கிளப்பி அவர்களில் எவரையேனும் ஒருவரை தேர்தலில் வெற்றி பெறச் செய்ய திட்டமிடுகிறார்கள். இன்று வன்னி மக்களின் எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையில் இவர்கள் சரத்பொன்சேகா என்ற கொடிய போர்க்குற்றவாளியை ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் சில தமிழ் ஊடகங்களாலே முன்னெடுக்கப்படுகிறது. பாம்பில் எந்த பாம்பின் விஷம் கொடியது? நல்லப்பாம்பின் விஷய்மா? நாகப்பாம்பின் விஷமா? என்று கேட்பது போல இருக்கிறது. ராஜபட்சே நல்லவரா? சரத்பொன்சேகா நல்லவாரா? என்ற விவாதம். வரவிருக்கிற அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் நல்லபாம்பிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நாகபாம்பு கோஷ்டியினரும்…..நாகப் பாம்பிற்கு தமிழ் மக்கள் ஒரு போதும் வாக்களிக்க போவதில்லை என்று நல்லபாம்பு கோஷ்டியினரும் மிகத் துல்லியமான உளவியல் பிரச்சாரத்தை செய்கிறார்கள். தமிழ் மக்கள் இதில் ஏதோ ஒரு பாம்பின் பக்கம் நிற்கிற படி அவர்களை அரசியல் விழிம்பில் கொண்டு வந்து நிறுத்திச் சென்றிருக்கிறார்கள்.

இந்த பாம்புகளை மனதில் வைத்து சிலர் தமிழ் மக்கள் பேரம் பேசும் வலுவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்

சொல்வது நமது நெருங்கிய நண்பர்கள் என்றாலும் அதாவது நல்லபாம்பிற்கோ, நாகப்பாம்பிற்கோ வாக்களிப்பதன் மூலம் ஈழ மக்கள் எதையாவது கோரிப் பெற்றுக் கொள்வதன் மூலம் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால் இந்தப் பேரம் படியுமா? விலைபோகுமா? என்பது குறித்த தெளிவு அவர்களிடமே இல்லை. ஒரு வேளை தமிழ் மக்களை தங்களை சிங்களத் தலைமைகளிடம் விற்க தயாராக இருந்தாலும் நேரடியாக விற்க முடியாத நிலையே உள்ளது. தவிறவும் பேரம் பேசுவது யாரிடம் என்ற கேள்வியும் எழுகிறது. பெரும்பான்மை வாதமே பௌத்த பாசிசமாக வளர்ந்து தமிழ் மக்களை அச்சுறுத்தி வைத்திருக்கிற; வம்பு செய்கிற தமிழ் மக்களை அடித்துக் கொல்கிற சிங்கள இனவெறியர்களிடமா? அல்லது வன்னி நிலங்களை சூறையாட நினைக்கும் இந்தியாவிடமா? யாரிடம் பேரம் பேசுவது என்ன பேரம் பேசுவது. இன்னும் புலி ஆதரவாளர்களும் ஈழ அபிமானிகளும் இந்தியாவை நம்பி காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கையில் ஏகாதிபத்திய நாடுகளின் கொடியையும் இந்தியாவின் கொடியையும் பிடித்திருக்கிறார்கள். மே மாதம் வரை இந்தியா எங்கள் நண்பன் என்று புலத்து மக்கள் பிடித்த அட்டையையும் மீறி ஈழ மக்களைக் கொன்று குவிக்க துணைபோமது இந்தியா. இயல்பாக இந்தியா மீது எழ வேண்டிய கோபம் கூட இவர்களுக்கு எழுவதில்லை.

ஆக , பேரம் பேசுவதல்ல ஒட்டு மொத்தமாக சிங்களத் தலைமையையே தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும். சிங்களர்களில் இருக்கும் தமிழ் மக்களின் சுய நிர்ணய போராட்டத்தை புரிந்து கொண்ட ஜனநாயகச் சக்திகளையும். ஒடுக்குமுறைக்கெதிராக போராடும், எதிர்ப்பியங்களில் ஈடுபடும் ஏனைய இயக்கங்களோடு தொடர்புகளைப் பேணுவதன் மூலம் ஈழப் போராட்டத்தை அடுத்த நகர்வுக்கு இட்டுச் செல்ல முடியும். ஆனால் மே மாதத்தோடு ஈழப் போராட்டம் முடங்கி, வெறும் வழிபாட்டுணர்வில் முடங்கிக் கிடக்க இந்த சிந்தனைமுறைகளே காரணம். விஸ்தரிப்பு நோக்கங்கள் கொண்ட அரசுகளை நம்பி போராடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை மாறாக மாறாக ஒடுக்கப்படும் இனம் தங்களைப் போல ஒடுக்கப்படும் இன்னொரு இனத்தை இனம் கண்டு கூட்டு சேர்வதன் மூலமே புதிய நகர்வுகளை முன்னெடுக்க முடியும். புலி ஆதரவாளர்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி : இனியொரு

No comments:

Post a Comment