Thursday, December 10, 2009

கருணாநிதி சிந்தனைகள் பாடமாவது குறித்து ஞாநி

மூன்று மனக் குடைச்சல்கள்:

மனக் குடைச்சல் 1:

.எல்.முதலியார், நெ.து.சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிசேஷையா, தெ.பொ.மீனட்சிசுந்தரனார்,மு.வரதராசன் போன்றெல்லாம் துணைவேந்தர்கள் இனி வரவே போவதில்லை என்று உணரும்போது பெரும் மனக் குடைச்சலாக இருக்கிறது.

அரசியல் செல்வாக்கு, பணம் இவை இரண்டும் மட்டும்தான் துணை வேந்தர் நியமனங்களில் இன்று செல்லுபடியாகக்கூடியவை. இரண்டு துணை வேந்தர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருக்கின்றன.

பதவி ஏற்றதுமே ஒரு துணைவேந்தர் அறிவித்தார். முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அனைத்துப் படைப்புகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் பரிசுக்கான கமிட்டிக்கு அனுப்பி வைக்கும் பணியை அவரது பல்கலைக்கழகம் செய்யுமாம்.

இப்போது புது நியமனமாகியிருக்கும் ஒரு துணைவேந்தர் அறிவித்திருக்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர் மூவரின் சிந்தனைகள் பற்றியும் தனித்தனியே முதுகலைப் படிப்பை அவரது பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துமாம். பெரியார் - சரி. சுயமான சிந்தனையாளர் . அவர் சிந்தனைகளைப் படிப்பது பயனுள்ளதுதான். அண்ணா - பெரியார் அளவுக்கு வரமாட்டார் என்றாலும் பரவாயில்லை. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் கலைஞர் ? - அவருடைய சுயமான சிந்தனை எல்லாமே சுயநலச் சிந்தனைகளக மட்டும் இருந்ததுதானே 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கை வரலாறு ? என்ன பாடத்திட்டம் போடுவார்கள் ?

நேர்மையாக போடுவதானால் இப்படித்தான் போடவேண்டும்: செமஸ்டர் 1: குடும்பவியல் சிந்தனைகள்: இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அரசு உயர் பதவியில் இருப்பவருக்கு மனைவி- துணைவி என்ற இரு உறவுகள் இருப்பதைப் பொது மக்கள் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் கருத்தாக்கங்களாக எப்படி நடைமுறைப்படுத்தினார் என்று ஆராயப்படும். சொந்த வாரிசுகள், மருமான் குடும்ப வாரிசுகள் ஆகியோரிடையே ஏற்படும் முரண்பாடுகளை களைந்து அனைவரும் பதவி, அதிகாரங்களை எப்படி எந்த விகிதத்தில் பகிர்ந்து அளித்தால் சமாதான சகவாழ்வு சாத்தியப்படும் என்ற குடும்பத் தலைவரின் சாணக்கிய சிந்தனைக் கூறுகளை ஆராயப்படும்.

செமஸ்டர் 2: கட்சி அமைப்புச் சிந்தனைகள்: உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாரும் உயர் பதவிக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்துவதல்ல; மாறாக எல்லாருக்கும் ஆட்சி அதிகார சுகங்களில் அவரவர் நிலைக்கேற்ற பங்குகளை அனுபவிக்க வழி வகுப்பது என்ற அடிப்படையில் ஊழலில் ஜனநாயக சோஷலிசத்தை அறிமுகம் செய்த பாங்கு ஆராயப்படும். சயண்ட்டிஃபிக் கரப்ஷன் என்ற சொற்றொடர் நீதிபதி சர்க்கரியா மூளையில் உதயமாவதற்கு உந்துதலாக இருந்த அம்சங்கள் தனியே ஆராயப்படும்.

செமஸ்டர் 3: மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற சமஷ்டி சித்தாந்த சிந்தனைகள் : மாநிலத்தில் சுயநல ஆட்சி தொடரும் விதத்தில், பாதிக்கப்படாத விதத்தில் மத்தியில் உள்ளோர் அனுமதிக்கும் வரை அவர்களுடைய சிந்தனைகளை நம் சிந்தனைகளாக எப்படி சுவீகரித்துக் கொண்டு கூட்டாட்சி நடத்தலாம் என்பது பற்றி ஆராயப்படும். அணி மாறி அந்தர் பல்டி அடிப்பதை ராமதாஸ் போல அபத்தமாகச் செய்து அம்பலமாகாமல், பண்டாரம் பரதேசி முதல் பண்டிதரின் பாரம்பரியம் வரை இலகுவாக மாறி மாறி கூட்டு சேரும் உத்திகளை ஆராயப்படும்.

செமஸ்டர் 4: மொழிச் சிந்தனைகள் : ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழிக்கல்வியை குழி தோண்டி புதைத்து விட்டு, அந்தக் கல்லறை மீது அமர்ந்து எப்படி கண்ணீர் வடிப்பது என்ற பிராக்டிகல் வகுப்புகள் இந்த செமஸ்டரில் இடம் பெறும். திரைப்படத்துக்கு தமிழ்ப் பெயரிட்டால் வரி விலக்கு என்று அறிவித்துவிட்டு, (வாரிசுகள் நடத்துவதால்) பட தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களுக்கு மட்டும் மொழி விலக்கு அளிக்கும் முரண்பாடுகள் மக்கள் கண்ணில் உறுத்தாமல் அவர்கள் கவனங்களை மானாட மயிலாட போன்ற பண்பாட்டு நிகழ்ச்சிகள் வாயிலாகத் திருப்புவது எப்படி என்ற உத்திகள் ஆராயப்படும். தமிழ் படித்த கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள் எல்லாருக்கும் எப்படி அரச்னை அண்டிப் பிழைத்து பரிசுகள் வாங்கும் தமிழ் மரபை 22ம் நூற்றாண்டிலும் கைவிடாமல் காப்பாற்றவேண்டும் என்று கற்றுத்தருவதற்காக அவ்வப்போது தன்னைப் பற்றிய கவியரங்குகள், பட்டி மன்றங்கள் ஏற்பாடு செய்து பாடம் புகட்டும் பாங்கு ஆராயப்படவேண்டும்.

செமஸ்டர் 5: பகுத்தறிவுச் சிந்தனைகள் :ஒவ்வொரு முறை ஊழல் பற்றியோ அராஜகம் பற்றியோ, நிர்வாக முறைகேடு பற்றியோ, முணுமுணுப்பாக விமர்சனக்கள் எழும்போதெல்லாம், அவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திருப்ப எப்படி பகுத்தறிவைப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய தந்திரோபாய சிந்தனைகள் ஆராயப்படவேண்டும். சூத்திரர் ஆட்சி, நெஞ்சில் தைத்த முள் போன்ற காவியச் சொற்கள் எப்படி முகமூடிகளாகப் பயன்படக்கூடியவை என்பது பற்றிய பிராக்டிகல் வகுப்புகள் இந்த செமஸ்டரில் இடம் பெறும். புரட்சிகரமான அறிவிப்பை அரசு மூலம் செய்துவிட்டு அதை நீதி மன்றத்தில் வழக்குகளின் மூலம் முடக்கிவிட தந்திரமாக வழி வகுத்துக் கொடுப்பதற்கு எப்படி பகுத்தறிவை பயன்படுத்தலாம் என்பது இந்த செமஸ்டரின் ஹைலைட்.

இன்னும் ஏழு செமஸ்டர்களுக்கு வேண்டிய சரக்குகள் இருப்பதால், பாடத் திட்டத்தை இளங்கலையிலிருந்தே தொடங்கி முதுகலை, முனைவர் பட்டம் வரை விரிவுபடுத்தலாம் என்று துணை வேந்தருக்கு பரிந்துரைக்கிறேன். படிக்கிறவனுக்கு எண்ட்டர்டெயின்மெண்ட்டாகவாவது பாடம் இருக்கட்டும்.

மனக் குடைச்சல் 2:

படித்த நடுத்தர வர்க்கத்தினர் துளியும் சமூக அக்கறையற்றவர்களாக நடமாடுவதைக் காணும்போதெல்லாம் இது எப்போதுதான் மாறும் என்ற மனக் குடைச்சல் அதிகமாகிறது.

மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாதில் 16 வயது சிறுவன் பாபர் அலியின் சாதனையைப் படித்தபோது நெஞ்சு நெகிழ்கிறது. வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரசுப் பள்ளிக்குப் போய் படித்துவிட்டு வரும் பாபர் அலி வீடு திரும்பியதும் அங்குள்ள குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கிறான். ஒன்பது வயதில் டீச்சர்- ஸ்டூடண்ட் விளையாட்டாக அவன் தொடங்கிய இந்த பள்ளிக்கூடம் இன்று வேலைக்குப் போய் திரும்பி வரும் 600 குழந்தைகளுக்கான பாடசாலையாகிவிட்டது. பாபரும் அவன் நண்பர்களும் தாங்கள் படித்ததை இங்கே வந்து சொல்லித் தருகிறார்கள்.

இதைப் பற்றி பி.பி.சி தொலைக்காட்சி படமெடுத்துக் காட்டினதும்தான் நமக்குத் தெரியவருகிறது. நம் தொலைக்காட்சிகளுக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகளே தேவையில்லையே. குழந்தைகளை அழவைத்து சூப்பர்ர் சிங்கராக்கி டி.ஆர்.பி ரேட்டை எப்படி ஏற்றுவது என்பதில்தான் நிலையங்கள் அக்கறையாக இருக்கின்றன. அதற்கு நாம் குடும்பம் குடும்பமாக ஒத்துழைக்கிறோம்.

தீபாவளி அன்று ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் பட்டாசுகள் கொளுத்திய குடும்பங்களை ஒவ்வொரு தெருவிலும் கண்டேன். ஒரு வீட்டில், பாபர் அலி வயதுச் சிறுமி பட்டாசைக் கொளுத்தி தெருவில் இருக்கும் நீல் மெட்டல் பனால்கா குப்பைத் தொட்டியில் போடுகிறாள். குடும்பமே அதை ரசித்துக் கொண்டு நிற்கிறது. சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் பாபர் அலியோ தனக்குக் கிடைத்த வாய்ப்பு கூட கிடைக்காதவர்களுக்காக தன் நேரத்தை செலவிடுகிறான்.

நடுத்தர வர்க்கம் தன் மனசாட்சியை மயக்கத்திலிருந்து எழுப்புவது எப்போது ?

மனக் குடைச்சல் மூன்று:

எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றுமில்லை என்பான் பாரதி. உண்மைதான். சில அடிப்படை மனித உணர்ச்சிகளை சொல்லும் படைப்புகள் மட்டுமே எந்த நாளிலும் அர்த்தமுள்ளதாகத் தோன்றும். மற்றவை காலத்துக்குப் பொருந்தாதவையாக ஆகிவிடும்.

28 வருடங்களுக்கு முன்பு நான் எழுதி எங்கள் பரீக்‌ஷா குழுவினர் நடித்த பலூன் என்ற நாடகத்தை இந்த வாரம் அக்டோபர் 25 ஞாயிறு அன்று மதியம் சென்னை அலையன்ஸ் பிரான்சே அரங்கில் நடத்தப் போகிறோம். ஒரு படைப்பை பல வருடம் கழித்து மறுபடியும் நிகழ்த்தும்போது படைப்பின் காலப் பொருத்தம் பற்றிய சிந்தனை மனதைக் குடைவது வழக்கம்.

அநியாயமான பஸ் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடும் ஆறு லட்சியவாதிகள் பற்றிய நாடகம் அது. வித்யாசமாகப் போராடுகிறார்கள். கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள். நையாண்டி வடிவத்தில் கோர்ட் ரூம் நாடகமாக எழுதப்பட்டது. இப்போது அதில் நடிக்கும் பெரும்பாலோர் அது எழுதப்பட்டபோது பிறக்கவே இல்லை. எழுபதுகளின் எண்பதுகளின் லட்சியவாதம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவே இன்றைய தலைமுறை சிரமப்பட வேண்டியிருக்கும். ( முப்பது நாற்பதுகளை புரிந்துகொள்ள எழுபதின் இளமைகள் சிரமப்பட்டதைப் போல.)

அப்போதுதான் தோன்றியது . நாடகத்தில் வரும் லட்சியவாதிகள் எண்பதுகளைச் சேர்ந்தவர்கள். இப்போது அவ்ர்கள் என்ன ஆகியிருப்பார்கள் ? என்னென்னவோ ஆகியிருக்கலாம். அதையும் ஒரு காட்சியாக எழுதி இப்போது சேர்த்தபிறகுதான் நாடகம் இன்றைய சூழலுக்குப் பொருந்திவருவதாக தோன்றியது.

ஏன் 2009ன் இளைஞர்கள் 1980களின் இளைஞர்கள் போல் இல்லை ? (பெரியவர்களும்தான்.) மனதைக் குடையும் விஷயங்களில் இதுவும் ஒன்று.

இந்த வாரப் பூச்செண்டு:

பொருளாதார மந்தம் என்பது எங்களை எதுவும் செய்யாது என்று நிரூபிப்பது போல நடுத்தர , பணக்கார வர்க்கம் தீபாவளி அன்று சென்னை நகரில் குவித்த சுமார் ஆயிரம் டன் கூடுதல் குப்பையை அகற்றும் பணியில் எந்த ஊதிய உயர்வும் இல்லாமல் ஈடுபட்டிருக்கும் பெயர் தெரியாத அத்தனை துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் இ.வா.பூ.

இந்த வார திட்டு:

என் அனுமதி இல்லாமலும், குமுதம் இதழில் வெளிவந்தது என்ற குறிப்பும் இல்லாமலும், பக்கக் கட்டுரையில் தன்னைப் பற்றிய விமர்சனத்தை ஒதுக்கிவிட்டு சினிமாக்காரர்கள் பற்றிய விமர்சனத்தை மட்டும் எடுத்து வெளியிட்டு பத்திரிகை தர்மத்துக்கு விரோதமாக நடந்துகொண்டிருக்கும் தினமலர் ஏட்டுக்கு இ.வா.தி.

இந்த வாரத் தகவல்:

லுங்கி கட்டிக் கொண்டு கமலா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

குமுதம் 18.10.2009

No comments:

Post a Comment