Thursday, December 10, 2009

தமிழகத்தின் இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்கள் பற்றி ஞாநி

அத்து மீறு..... அடங்க மறு....

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு பெருமளவில் இளைஞர்களைக் கவர்ந்திழுத்து தானும் ஒரு அரசியல் சக்தியாக உருவானவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் வை.கோ. இன்னொருவர் தொல்.திருமாவளவன்.

இன்று தமிழகத்தில் அரசியல் அரங்கில் பரிதாபத்துக்குரியவர்களாக தங்களை ஆக்கிக் கொண்டிருப்பவர்களும் இதே இருவர்தான். வைகோ வேறு வழியின்றி ஜெயலலிதா அணியில் ஒட்டிக் கொண்டிருப்பவராகவும், திருமா அதே போல வேறு வழியின்றி கருணாநிதி அணியில் ஒட்டிக் கொண்டிருப்பவராகவும் காட்சி தருகிறார்கள்.

ஏன் இப்படி நிகழ்ந்தது ?

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்று தேவை என்ற உணர்வு பரவலாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வைகோ கவனத்துக்குரிய தலைவராக நுழைந்தார். ஜெயலலிதாவின் சித்தாந்தமற்ற அரசியலோடு எரிச்சலடைந்தும், கருணாநிதியின் சித்தாந்தப் பூச்சிலான சுயநல அரசியலோடு வெறுப்படைந்தும் இருந்த ஏராளமான தமிழ் இளைஞர்களுக்கு வைகோ நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார்.

ஆனால் அவரால் தி.மு.க போல ஒரு வலுவான கட்சி அமைப்பை உருவாக்கவே முடியவில்லை. அதை செய்யக்கூடிய அடுத்த நிலைத் தலைவர்களையும் அவரால் உருவாக்க முடியவில்லை. தன்னுடைய பேச்சாற்றல் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த ஆயுதமும் இல்லாதவராக அவர் இருந்தார்.

அந்தப் பேச்சாற்றலையும் தமிழகத்தின் பிரதான பிரச்சினைகளில் மக்களைத் திரட்ட அவரால் பயன்படுத்த முடியவில்லை. ஈழத்தமிழர் சிக்கல், புலிகள் ஆதரவு என்பவற்றோடு மட்டுமே அடையாளப்படுத்தப்படுபவராக தன்னைத்தானே அவர் சுருக்கிக் கொண்டார்.

தி.மு.க, அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றான காங்கிரசல்லாத மூன்றாவது அணி ஒன்றைத் தலைமையேற்று உருவாக்க்க் கூடிய வாய்ப்பை வைகோவால் திறம்படக் கையாளமுடியாமலே போய்விட்டது. அதற்கு மாறாக அடிக்கடி அணி விட்டு அணி மாறுபவராகவும் அப்படி மாறினாலும் அதனால் ராமதாஸ் போல ஆதாயம் அடையத்தெரியாத அசட்டு அரசியல்வாதியாகவும் தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்டுவிட்டார்.

வைகோவின் வருகைக்கு சுமார் பத்தாண்டுகள் பின்னர் அதமிழக அரசியலில் கவன ஈர்ப்பு இடத்தை அடைந்தவர் தொல். திருமாவளவன். வைகோவை விட திறமையோடு கட்சி அமைப்பை உருவாக்கியவர் திருமா. அதுவரை இருந்து வந்த தலித் அரசியலின் தன்மையையே மாற்றியவர் திருமா. பெரிய கட்சிகளின் மாணவர் பிரிவு, மகளிர் பிரிவு போல தலித் பிரிவு, தலித் செல், தலித் கமிட்டி என்று ஒன்று இருந்துவிட்டுப் போகலாம் என்றிருந்த அரசியலில் தலித் இயக்கத்தை தனிக் கட்சியாகக் கட்டிய பெருமை டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் திருமாவுக்கும் மட்டுமே உண்டு. அதில் அவர்களுக்கு மாடலாக அமைந்தவர் வன்னிய சாதி அமைப்பைக் கட்சி அமைப்பாக மாற்றிய மருத்துவர் ராமதாஸ் என்று சொல்லலாம்.

ஆனால் திருமா இதர தலித் தலைவர்களை விட தனித்துவம் மிகுந்தவராக இருந்தார். பேச்சாற்றல் அதில் முதன்மையானது. படிப்பாற்றலும், திராவிட இயக்க, பொதுவுடைமை இயக்கக் கூறுகளின் தாக்கமும் அவருக்கு இருந்த கூடுதல் பலங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தலித் இளைஞர்களின் நீறு பூத்த நெருப்பாக இருந்த கோபத்துக்கு அமைப்பு ரீதியான வடிகாலும், கொள்கைப் பூச்சும் அளித்தவர் அவர்தான்.

தங்களை ஒடுக்கும் அமைப்புக்கு எதிராக கலகம் செய்தாலன்றி விடுதலை பெற முடியாது என்பதையே அரசியல் வழிமுறையாக ஆக்கி ‘அத்து மீறு அடங்க மறு’ என்று திருமா முன்வைத்த முழக்கம்தான் தலித் இளைஞர்களைத் திரட்டியது.

ஆனால் இதற்கு மேல் திருமாவால் செல்ல முடியவில்லை. அவரும் வைகோவைப் போலவே தன்னை ஈழத்தமிழர் சிக்கல், புலிகள் ஆதரவு முதலியவற்றுக்கே முன்னுரிமை தருபவராக அடையாளப்படுத்திக் கொண்டார். மாறி மாறி தி.மு.க, அ.தி.மு.க இரு அணிகளிலும் இடம் பெறுபவராகவும் அபடி மாறினாலும் அதனால் ராமதாஸ் போல பெரிய ஆதாயங்களை அடையத் தெரியாத அசட்டு அரசியல்வாதியாகவும் முற்றிலும் வைகோ பாணியிலேயே திருமாவின் அரசியலும் அமைந்துவிட்டது.

தலித் அடையாளத்தை விட ஈழத்தமிழர் ஆதரவு அடையாளத்தை கடந்த சில வருடங்களில் பிரதானப்படுத்தியதன் விளைவாக திருமாவின் தலித் அரசியல் பலவீனமடைந்துவிட்டது. பல்வேறு தலித் இயக்கங்களை ஒன்றுபடுத்தி அடுத்த கட்டத்துக்கு தலித் அரசியலை எடுத்துச் செல்ல அவரல் முடியவில்லை.

இப்போது ஈழத்தமிழர் சிக்கலிலும், அவர் எடுத்திருக்கிற நிலைகள் அவரை தமிழ் தேசிய ஆதரவாளர்கள் மத்தியிலும் அருவெறுப்புக்குள்ளாக்கிவிட்டன.

’அத்து மீறு அடங்க மறு’ என்பது புரட்சிகரமான அரசியல் முழக்கம் அல்ல; கட்டைப் பஞ்சாயத்துக்கு மட்டுமேயானது என்ற அவல நிலைக்கு வந்துவிட்டது. சமூகத்துக்கு திருமாவின் மிகபெரிய பங்களிப்பு என்பது பிளெக்ஸ் விளம்பரப் பலகைத் தொழிலுக்கு உத்வேகமும் வணிகமும் ஏற்படுத்திக் கொடுத்ததுதான் என்று சரித்திரம் குறிக்கக்கூடிய அபாயம் ஏற்படுமளவுக்கு இன்று வேறெந்த சினிமா நடிகரை விடவும் திருமாவுக்கே அதிகமான கட் அவுட்டுகள் தமிழகமெங்கும் இருக்கின்றன. பாலாபிஷேகம் மட்டும்தான் பாக்கி.

இலங்கைக்குச் சென்று யுத்த அகதிகள் முகாம்களைப் பார்வையிட அனுப்பப்பட்ட தி.மு.க கூட்டணி எம்.பிகள் குழுவில் சென்ற திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவரா, விடுதலைப் பூனைக் குட்டிகள் அமைப்பின் தலைவரா என்ற சந்தேகம் தோன்றும் நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் மேடைக்கு மேடை அவர் பேச்சில் அகதிகள் முகாமில் இருக்கும் தமிழ்ப் பெண்களிடம் சிங்கள ராணுவம் பாலியல் அத்து மீறல்கள் செய்வதாகவும் தமிழ் இளைஞர்கள் கடத்திக் கொல்லப்படுவதகவும் பேசி வந்தவர், இந்த இரு விஷயங்களைப்பற்றியும் ராஜபக்‌ஷேவை சந்தித்தபோது முணுமுணுக்கக் கூட இல்லை. ஏன் முணுமுணுக்கக்கூட இல்லை என்று கேட்டால், குழுத்தலைவர் டி.ஆர்.பாலு திருமாவுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டதாக விளக்கம் வருகிறது. அத்து மீறு அடங்க மறு என்பதெல்லாம் அப்பாவி தலித் தொண்டனுக்கு மட்டும்தானா? ஆதிகக் ஜாதிகளுக்கு எதிராக அத்து மீறலாம் அடங்க மறுகலம். ஆனால் டி.ஆர்.பாலுக்களுக்கு அடங்கிப் போய்விடுவதுதான் தன் போன்ற தலித்துகளுக்கு நல்லது என்பதுதான் திருமாவின் இலங்கைப் பயணம் அளித்திருக்கும் செய்தி.

வைகோவுக்கும் திருமாவுக்கும் அரசியலில் ஏற்பட்ட கதி அரசியல் ஆய்வாளர்களின் விரிவான ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியதாகும். ஏனென்றால் சீரழிவு சக்திகளுக்கு எதிராக தொடங்கும் கலக அரசியல் தானும் சீரழிந்து போவது ஏன் என்பதை அறிவதில்தான் அடுத்த பத்தாண்டுகளுக்கான அரசியல் அடங்கி இருக்கிறது.

இன்னும் ஐந்தாறு வருடங்களில் கலைஞர் கருணாநிதி தொண்ணூறைத் தாண்டும் வேளையில் அவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் சக்தியாக இருக்கப்போவதில்லை. அவருடைய விலகலால் ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்பப் போகும் அரசியல் சக்திகள் யார் ? எவை? எப்படிப்பட்டவை என்பது பற்றி அக்கறை உள்ள ஒவ்வொருவரும், வைகோவுக்கும் திருமாவுக்கும் நேர்ந்த கதியிலிருந்து படிப்பதற்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன.


இந்த வாரப் பூச்செண்டு:

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடந்து வரும்போது முன்னால் வெள்ளிச் செங்கொல் தூக்கிக் கொண்டு பணியாள் செல்லும் வழக்கத்தை ஒழித்திருப்பதற்காக கேரள உயர்நீதிமன்றத்துக்கு இ.வா.பூச்செண்டு.

இந்த வாரத் திட்டு:

பஸ் விபத்துகளில் பாதிக்கப்பட்ட 11 ஆயிரம் குடும்பங்களுக்கு தரவேண்டிய 324 கோடி ரூபாயைத் தராமல் வருடக்கணக்கில் ஏய்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களுக்கு இ.வா.தி.

குமுதம் 2.11.2009

No comments:

Post a Comment